பிகார் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில், சுமார் 7.5 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். பத்து மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. இருந்தபோதிலும், இந்த வெள்ளத்தால் ஒரு உயிரிழப்புக் கூட நடைபெறவில்லை என பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிகார் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேபாள நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள கிழக்கு சம்பரன், மேற்கு சம்பரன், தர்பங்கா, முசாபர்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 426 கிராம பஞ்சாயத்துகளில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் சிக்கிய 36ஆயிரத்து 448 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். சுமார் 14 ஆயிரம் பேர் 28 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 80 ஆயிரம் பேருக்கு தினமும் உணவு வழங்கப்பட்டுவருகிறது" என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இயற்கையின் கோபம் குறையும் வரை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும், மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்" என, அம்மாநில அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக அரசு கூறினாலும், கள நிலவரம் என்பது வேறாக இருப்பதை மக்கள் கூறும் செய்திகளின் மூலம் நாம் உணரமுடிகிறது.
சில பகுதிகளில் வீடுகள் தண்ணீரில் மூழ்கிவிட்டதால், பாதுகாப்பு மிகுந்த பகுதிக்குச் சென்ற மக்கள், அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட எதிர்கட்சித் தலைவர்கள், நிதிஷ்குமார் தலைமையிலான அரசு வெள்ளச் சேதப்பகுதிகளில் பெருமளவு நடவடிக்கை எடுக்கவில்லை என, குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அசாம் வெள்ளம்: இரங்கல் தெரிவித்த ரஷ்ய அதிபர்