கோதாவரியின் நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக அந்த நதியின் வடிநிலப்பகுதிகளில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக, கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள பல்வேறு கரையோர கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் அங்கு வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தவலேஸ்வரம் சர் ஆர்தர் காட்டன் தடுப்பு அணைக்கு வரும் தண்ணீரின் அளவு நேற்று இரவு 9 மணிக்கு 1.48 லட்சம் கனஅடியாக உயர்ந்ததால் இரண்டாம் கட்ட அபாய எச்சரிக்கை விடுக்கப்பப்பட்டது. மேலும், ஸ்ரீசைலம் அணையிலிருந்து 2.69 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், நாகர்ஜுனா சாகர் அணையின் நீர்வரத்து 1.18 கன அடியாக அதிகரித்துள்ளது.
வெள்ளப் பெருக்கின் காரணமாக, கூடுதலாக வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்படும் என ஆந்திர மாநிலத்தின் பேரிடர் மீட்புக் குழு ஆணையர் கே.கண்ணா பாபு தெரிவித்துள்ளார். இதனிடையே, இடுப்பு அளவு உயரத்திற்கு தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் படகுகளில் சென்று தேசிய, மாநில பேரிடர் மீட்புப் பணியினர் மீட்புப் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.