உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா மாவட்டம் அகர்லாயா கிராமத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் நேற்று அந்தப் பகுதியில் உள்ள மரத்தில் பழம் பறிக்கச் சென்றுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக வயல்வெளியில் மூடப்படாமல் இருந்த 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளான். இது குறித்து சிறுவனின் பெற்றோர் மற்றும் கிராமத்தினர் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து மாவட்ட ஆட்சியர் சிறுவனை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலறிந்து காசியபாத்தில் இருந்த வந்த மீட்புக் குழுவினர் சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். மீட்புப் பணியில் முதற்கட்டமாக சிறுவனுக்கு பிரணாவாயு கொடுக்கப்பட்டது. பின்னர் ஆழ்துளை கிணற்றிக்கு அருகில் பள்ளம் தோண்டப்பட்டு மீட்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்றுவந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை மீட்புக் குழுவினர் சிறுவனை பத்திரமாக மீட்டு அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.