சர்வதசே நிதியத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கிவரை இந்தியாவில் வரலாறு காணாத பொருளாதர நெருக்கடியை சந்திப்பதாக அறிவித்துள்ளன. இந்தச் சூழலில், பொருளாதர சீர்கேட்டால் ஏற்படப்போகும் விளைவுகளான வேலையின்மை, வருவாய் சிக்கல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவதே புத்திசாலித்தனம்.
பொருளாதார சரிவின் தாக்கதிலிருந்து நாம் தப்பிக்க செய்ய வேண்டிய, செய்யக்கூடாத சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பார்க்கலாம்.
1. அவசர கால நிதியை மேம்படுத்துங்கள்: மேற்சொன்னது போல இந்த ஸ்திரமற்ற சூழலில் நம்மை பாதுகாத்துக்கொள்ள அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அதன் காரணமாக அடுத்த ஆறு மாத காலத்திற்கு அத்தியாவசிய செலவுகளைத் தாண்டி வேறு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ள வேண்டாம். ஈஎம்ஐ உள்ளிட்ட ஆடம்பர சிக்கலிலிருந்து விலகிக்கொள்வது தேவையற்ற குடைச்சல்களிலிருந்து பாதுகாக்கும். வங்கிக் கணக்கில் தேவையான அளவிற்கு இருப்புத் தொகை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.
2. சுகாதார காப்பீட்டுத் திட்டம்: இதுபோன்ற சூழலில்தான் பொதுச்சுகாதாரம், உடல் நலன் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படும். பொதுவாக வேலை பார்க்கும் இடத்திலேயே தனிநபர், குடும்ப காப்பீட்டு திட்டம் அனைவருக்கும் செய்து தரப்படுகிறது. ஆனால் உங்களுக்கு வேலையிழப்பு ஏற்படும்பட்சத்தில் உங்கள் குடும்பத்தை பாதுகாக்க ஏதேனும் ஒரு தனிநபர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துகொள்வது எதிர்கால நலனை உறுதி செய்துவிடும்.
3. கடனுக்கு நோ சொல்லுங்கள்: இதுபோன்ற சூழலில் நாம் புதிதாக கடனோ அல்லது இஎம்ஐ கட்டும் சூழலிலோ சிக்கிக்கொள்வது தற்கொலைக்குச் சமம். மாதா மாதம் நமது தலையில் நாமே சுமையை ஏற்றிக்கொள்வதாகும். எனவே வரவுக்கேற்ற செலவீனங்களை மேற்கொள்வதை உறுதிசெய்ய பட்ஜெட் என்பது மிக அவசியம்
4. வாங்கும் அளவை கட்டுப்படுத்துங்கள்: பொதுவாக லாக் டவுன் நேரத்தில் பல நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையளர்களை கவர்ந்திழுக்க பல சலுகைகளை அள்ளித் தெளிக்கும். நாமும் தேவைக்கேற்ப பொருள்களை வாங்க வேண்டும் என்ற கவனத்திலிருந்து விலகி கூடுதல் செலவுகள் மேற்கொள்வதற்கான் வாய்ப்புகள் உண்டு. எனவே சுயக்கட்டுப்பாடு மிக அவசியமாகும். மேலும், நிலைமை சீரானதும் தங்கள் சினிமா, உணவகம், சுற்றுலா என ஆடம்பர செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து கைகளை கட்டுக்குள் வையுங்கள்.
5. பணியிடத்தில் திறனை நிரூபியுங்கள்: இக்கட்டான சூழலில்தான் பணியிடத்தில் உங்களது வேலைத்திறன் பரிசோதிக்கப்படும். நிறுவனம் நிதிச்சுமையை குறைக்கும் நோக்கில் வேலை நீக்க நடவடிக்கை, சம்பள குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். திறன்வாய்ந்த தொழிலாளரை எந்தவொரு நிறுவனமும் இழக்க விரும்பாது. உங்கள் திறனை நிரூபிக்க சரியான நேரம் இது.
பின் குறிப்பு: மேற்கொண்ட அனைத்தும் நிதித்துறை நிபுணர் சாய் கிருஷ்ணாவின் சொந்த கருத்துகள். ஈடிவி பாரத் நிறுவனத்திற்கு இதில் எந்தவித பொறுப்பும் இல்லை.
இதையும் படிங்க: கரோனா: இந்தியாவுக்கு தேவை சீரான பொருளாதார வரைவு