கொல்கத்தாவைச் சேர்ந்த ஜெஸிகா கான்(11), முகமது அசாஜுதீன்(12) என்ற இரு பள்ளி மாணவர்கள் தங்களது புத்தகப் பைகளை சுமந்துகொண்டு தெருவில் செல்லும்போது ஜிம்னாஸ்டிக்ஸ் போன்று குட்டிக்கரணம் அடித்து நடனமாடும் வீடியோ சில நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனைக் கண்ட மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் ஒலிம்பிக்ஸில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் ஐந்து முறை தங்கப் பதக்கம் வென்ற வீராங்கணை நாடியா கோமனீச் ஆகியோர் மாணவர்களை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய ஜெஸிகா கான், 'இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த பாராட்டுகள் குறித்து நான் எனது பெற்றோர்களிடம் கூறினேன். அவர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். நான்கு ஆண்டுகளாக ஜிம்னாஸ்டிக் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். நான் வருங்காலத்தில், நாடியா கோமனீச் போல ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக வலம் வருவேன்' என நம்பிக்கை தெரிவித்தார்.
முகமது அசாஜுதீன் கூறுகையில், 'நான் எனது நடன ஆசிரியருக்கு பெருமை சேர்க்க ஏதாவது செய்ய விரும்புகிறேன். எதிர்காலத்தில் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தால், நான் அதை முயற்சிப்பேன். ஆனால், நான் ஒருபோதும் நடனமாடுவதை நிறுத்த மாட்டேன்’ என்றார்.