2021-22 மத்திய நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், இன்று மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்றது.
அப்போது மாநிலங்களவையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை ஆகியோர் மீனவர் பிரச்சினை குறித்து குரலெழுப்பினர்.
கடந்த ஜனவரி 18ஆம் தேதி தமிழ்நாடு மீனவர்கள் நான்கு பேர் கொலைசெய்யப்பட்டு, இலங்கை கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த விவகாரத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த திமுக உறுப்பினர் திருச்சி சிவா, இலங்கை கடற்படையின் இந்த அராஜக நடவடிக்கை நீண்டகாலமாக நடைபெறுவதாகக் குற்றஞ்சாட்டினார். மத்திய அரசு இதில் விரைந்து தலையிட்டு தீர்வுகாண வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் தம்பிதுரை, நான்கு மீனவர்கள் மட்டுமல்ல, இதுவரை 245 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து விடைகாண வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி இதுதொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் அளித்துள்ளார் என்றார்.
இருவருக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்த விவகாரம் தொடர்பாக கடுமையான கண்டனத்தை இலங்கை அரசிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுபோன்ற செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
இதையும் படிங்க: கிரெட்டா தன்பெர்க், ரிஹான்னா... விவசாயிகளுக்கு ஆதரவாக ஒலிக்கும் சர்வதேச குரல்கள்!