சட்டப் பிரிவு 370 நீக்கத்திற்குப்பின் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதன்படி அங்கு அரசு விடுமுறையாக அனுசரிக்கப்பட்டுவந்த ஜூலை 13 மற்றும் டிசம்பர் 5ஆம் தேதி ஆகிய நாள்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் அரசாட்சிக்கு எதிராக 1931ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி அங்கு மக்கள் நடத்திய கிளர்ச்சியில் 22 பேர் கொல்லப்பட்டனர். அதன் நினைவாகவே அங்கு ஆண்டுதோறும் மாவீரர் தினம் கொண்டாடப்படுகிறது. 1948ஆம் ஆண்டு முதல் இந்தத் தினம் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் தற்போது அது நீக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஷேக் முகமது அப்துல்லா பிறந்தநாளான டிசம்பர் 5ஆம் தேதியும் தற்போது அரசு விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பிதாமகராகக் கருதப்படும் ஷேக் அப்துல்லா பிறந்த நாளை நீக்கியது, அவர் உருவாக்கிய தேசிய மாநாட்டுக் கட்சியினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை, இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைவதற்கான இன்ஸ்ட்ருமென்ட் ஆஃப் அசெஸ்ஸன் என்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட தினம் அரசு விடுமுறை தினமாக தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமித்ஷாவின் கருத்துக்கு ட்விட்டரில் கேள்வி எழுப்பிய ராகுல்!