ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவந்த கரோனா மையத்தில் இன்று (ஆக.09) அதிகாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தீ விபத்தால் சிகிச்சை மையம் முழுவதும் அடர்த்தியான புகை பரவியது. கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். தீ விபத்தில் பரவிய அடர்த்தியான புகை காரணமாக நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் பிரச்னை ஏற்படாமல் தவிர்க்க, நோயாளிகள் விரைவாக லேடிபேட் பகுதியிலுள்ள ரமேஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அப்பகுதிக்கு விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், இரண்டு மற்றும் மூன்றாவது மாடியில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் ஏணி மூலம் கீழே அழைத்து வரப்பட்டனர்.
கரோனா சிகிச்சை மையத்தில் அதிகாலையில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஏர் இந்தியா விபத்து: இறந்த விமானி அகிலேஷ் மனைவிக்கு இன்னும் 15 நாட்களில் பிரசவம்