பூசாவல் நகரில் மகாராஷ்டிரா தொழில் துறை மேம்பாட்டுக் கழகத்தில் தொழிற்பேட்டையில் மின் பொருள்கள் உற்பத்தி நிறுவனமான டிஸ்கோ எண்டர்பிரைசஸ் இயங்கிவருகிறது. இந்நிறுவனமானது தொலைக்காட்சிகள், கண்ணாடி ஒளி இழை (ஃபைபர்), குளிரூட்டிகள் உள்ளிட்ட மின்பொருள்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது.
இந்நிறுவனத்தில் நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. சுமார் 50 மீட்டர் உயரத்திற்கு எரிந்த தீயானது ஏறத்தாழ மூன்று ஏக்கர் பரப்பளவில் கொளுந்துவிட்டு எரிந்தது.
ஊரடங்கு காரணமாக டிஸ்கோ எண்டர்பிரைசஸ் நிறுவனம் மூடப்பட்டிருந்த நிலையில் அங்கு யாருமில்லாத காரணத்தால் இந்த விபத்து சம்பவம் தாமதமாக காவல் துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்த உடனடியாகச் சம்பவயிடத்திற்கு வந்த தீயணைப்புக் காவல் துறையைச் சேர்ந்த வீரர்கள் விரைந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர். தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
ஆனால், அதற்குள் மொத்த நிறுவனமும் தீயில் எரிந்து நாசமானது. பூசாவல் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரிக்கின்றனர்.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. எனினும், பெரிய அளவிலான நாசம் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : முன்னேற்றப் பாதையில் இந்தியா - சுகாதாரத் துறை நம்பிக்கை