ஃபிரான்ஸ் நாட்டிடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதில் முறைகேடு நடந்துள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ரஃபேல் விமானங்களை மத்திய அரசு கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் எந்த சந்தேகமும் இல்லை என சமீபத்தில், மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, ரஃபேல் விவகாரத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் இருந்து குறிப்பிட்ட சில முக்கிய ஆவணங்கள் திருடுபோயுள்ளதாகவும், நாட்டின் பாதுகாப்பிற்காகவே நாங்கள் போர் விமானங்களை வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்கிறோம் எனவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்புத்துறை அலுவலகத்திலிருந்தே ஆவணங்கள் திருடப்பட்டதாக மத்திய அரசு கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து இன்று நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளதாவது:
“ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக நீங்களே கூறியிருக்கிறீர்கள். அப்படியானால், ரஃபேல் ஒப்பந்த பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடியின் முறையற்ற தலையீடு குறித்து அந்த ஆவணங்களில் கூறியிருப்பது உறுதியாகிவிட்டது. தான் குற்றவாளி இல்லை என்று பிரதமர் உறுதியாக இருந்தால், இதுகுறித்த விசாரணையைப் பிரதமர் ஏன் இன்னும் தொடங்கவில்லை? ஆவணங்கள் தொலைந்துபோனதற்குப் பத்திரிகைகள் மீது வழக்கு தொடரவேண்டும் எனப் பேசி வருகிறார்கள். ரஃபேல் ஒப்பந்தத்தின் மூலம் சுமார் 30 ஆயிரம் கோடியைக் கொள்ளையடித்தவர்கள் மீது ஏன் விசாரணை மேற்கொள்ளக்கூடாது?" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "முதலில் ரஃபேல் மூலம் பணம் திருடப்பட்டது. இப்போது ஆவணங்கள் மாயமாகியுள்ளது. இதை வைத்து மோடி மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பிதிவு செய்யவேண்டும்" என அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.