இந்திய-சீன எல்லையில் பதற்றம் நிலவிவரும் சூழலில், ஓய்வூதிய முதலீடுகளில் முதலீடு செய்வதற்கு இந்திய எல்லையோர நாடுகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய நிதியமைச்சகம் முடிவுசெய்துள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஓய்வூதிய நிதிகளின் அந்நிய முதலீடு 49 விழுக்காடு வரை உள்ளது.
இந்நிலையில், நிதியமைச்சகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள வரைவு அறிக்கையில், ”சீனா உள்ளிட்ட இந்தியாவின் அண்டை நாடுகள் முதலீடு செய்வதற்கு அரசின் அனுமதிபெற வேண்டும். அதேபோல் அரசால் வெளியிடப்படும் அந்நிய நேரடி முதலீடு கொள்கைகளும் இதற்குப் பொருந்தும்.
அதனால் அரசின் அனுமதிக்குப் பிறகே அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும். இந்தக் கட்டுப்பாடுகள் மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும். இந்த உத்தரவுகள் பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கும் பொருந்தும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.