2020-21ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், வருவாய் திட்டத்தின் (உரிமக் கட்டணம், ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கியது) தற்போதைய மதிப்பீடு ரூ. 58,989 கோடியிலிருந்து, ரூ .1.33 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது மதிப்பீடு செய்ததை விட இரு மடங்கு அதிகமாகும்.
இதனால், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு (வோடாபோன், ஏர்டெல் போன்றவை) அளிக்கப்படும் நிவாரணத்திற்கான அனைத்து வாய்ப்புகளையும் நிராகரிக்கிறது. இந்தத் திட்டத்தில் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (ஏஜிஆர்) கடன்களோ, ஸ்பெக்ட்ரம் ஏல நடைமுறைகளோ அடங்கவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
நிதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஆண்டு நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையைச் செலுத்துவதற்காக இரண்டு ஆண்டு கால நிவாரணம் வழங்கப்பட்டது. அந்நிறுவனங்களின் சிக்கலான நிதி நிலைமையை கருத்தில்கொண்டு, அமைச்சரவைச் செயலாளர் தலைமையிலான குழு 2020-21, 2021-22ஆம் ஆண்டுகளுக்கு இந்த ஒப்புதலை வழங்கின.
நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை, குறைவான வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக வரி மற்றும் வரி அல்லாத வருவாய் வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் 2020ஆம் நிதியாண்டை விட 2021ஆம் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 3.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக பொருளாதாரத் துறைச் செயலர் அதானு சக்ரவர்த்தி கூறுகையில், உரிமக் கட்டணம், ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணங்கள் ஆகியவற்றிலிருந்துதான், தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கு வருவாய் பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டது எனவும் அதில் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய்க்கான நிலுவைத்தொகை சேர்க்கப்படவில்லை என்றும் கூறினார்.
ஏஜிஆர் நிலுவைத்தொகையைச் செலுத்த 10, 12 ஆண்டுகளாக முயன்றுவரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எந்தவொரு நிவாரணமும் வழங்கப்பட மாட்டாது என்பதை சக்ரவர்த்தியின் கருத்து தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஏஜிஆர் குறித்த உத்தரவு 2019ஆம் ஆண்டு அக்டோபரில் வெளிவந்தது. நிவாரணம் வழங்கமுடியாது என உச்ச நீதிமன்றமும் தெளிவாகக் கூறிவிட்டது.
தகவல் தொடர்பு சேவை மற்றும் தொலைத்தொடர்பு நிறுவங்களிடம் இருந்துவரும் ரசீதுகள் அனைத்தும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணம், உரிமக் கட்டணம் ஆகியவற்றுடன் தொடபுடையவை என்றும், உரிமம் பெற்ற தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களிடமிருந்து தொடர்ச்சியான உரிமக் கட்டணங்களை தொலைத்தொடர்புத் துறை வசூலிப்பதாகவும் 2020-21ஆம் பட்ஜெட்டில் அரசு தெரிவித்தது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 3-5 சதவீத ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணத்தையும் 8 சதவீத உரிமக் கட்டணத்தையும் செலுத்துகின்றன. மேலும், அவர்கள் 5 சதவீத பன்னாட்டு சேவை பொறுப்பு கட்டணத்தையும் செலுத்துகின்றன.
இந்த விவகாரத்தில், நிலுவைத்தொகையைச் செலுத்த உச்ச நீதிமன்றம் கட்டாயப்படுத்துவதால், மத்திய அரசால் நிலுவைத்தொகையை வழங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது. இதனால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், நிறுவனங்களை மூட விரும்பவில்லை. மாறாக, ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணம், உரிமக் கட்டணம் ஆகியவற்றைக் குறைப்பதற்கான பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளன.
இந்த இரண்டு கட்டணங்களையும் குறைக்க வேண்டுமென நிறுவனங்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை வைத்து வருகின்றன. இதனை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயும் ஆதரித்துள்ளது. கடந்த வாரம் கூட ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆர்.எஸ். பிரசாத்தைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பில், தொலைத்தொடர்புத் துறையில் இருக்கும் அதிக வரிவிதிப்பு, நிதிச் சிக்கல் ஆகியவை தொடர்பான பிரச்னையை எழுப்பியுள்ளதாக அவர் கூறினார்.
இதையும் படிங்க: கொரோனாவை இந்திய சந்தை சமாளிக்கும் - வர்த்தக கூட்டமைப்பு நம்பிக்கை