சென்னை உயர் நீதிமன்றத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஆர். ஞானசேகரன் தாக்கல்செய்த மனுவில், "ஊழலை ஒழிக்க வகைசெய்யும் லோக் ஆயுக்தாவை அமல்படுத்தக் கோரி புதுச்சேரியில் உள்ள தலைமை அஞ்சலகம் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி துணைநிலை ஆளுநரிடம் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி மனு அளித்தேன்.
ஆளுநர் அலுவலகத்தில் இருந்து காவல் துறையை அணுக அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிராண்ட் பஜார் காவல் நிலையத்தில் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி வழங்க விடுத்த கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் 2019 பிப்ரவரி 13ஆம் தேதி லோக் ஆயுக்தாவை அமல்படுத்த வலியுறுத்தி, அனுமதி இல்லாமல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் இல்லம் முன் முதலமைச்சர் வி. நாராயணசாமி உள்ளிட்டோர் ஆறு நாள்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சர் வி. நாராயணசாமி இல்லத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்ட என்னை பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகக் கூறி காவல் துறையினர் கைதுசெய்தனர். ஆனால், முதலமைச்சர் வி. நாராயணசாமி உள்பட தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, அனுமதி இல்லாமல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் இல்லம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் வி. நாராயணசாமி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், ஆர். ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு தொடர்பாக, புதுச்சேரி காவல் துறைத் தலைவர் வருகின்ற ஜனவரி 5ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: "140 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" - தேசியப் பேரிடர் மீட்புப் படையின் இயக்குநர்