அகில இந்திய தலைமைத் தேர்தல் அலுவலர்களின் 80ஆவது மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். "சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகியவற்றின் இணக்கமான ஒருங்கிணைப்பின் மூலமாகவே ஜனநாயகத்தை துடிப்பாக வைத்துக் கொள்ள முடியும்" என்ற தலைப்பில் பேசிய வெங்கையா நாயுடு, மற்ற அனைத்தைக் காட்டிலும் அரசியலமைப்பே முக்கியமானது எனத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "சில நீதிமன்றத் தீர்ப்புகள் எல்லை மீறுவதுபோல் அமைந்துள்ளதாகத் தெரிகிறது.
அரசியலமைப்புக்கு ஏற்ப தங்களுக்கு வகுக்கப்பட்ட எல்லைக்குள் சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகியவை செயல்பட வேண்டும். மற்றவைகளின் எல்லையில் தலையிடாமல் செயல்படுவதிலேயே நல்லிணக்கம் அமைந்துள்ளது. இவற்றுக்குள் செயல்பட்டால் மட்டுமே பரஸ்பர மதிப்பு, பொறுப்பு, கட்டுப்பாடு ஆகியவை கிடைக்கும். துரதிஷ்டவசமாக, இத்துறைகள் எல்லை மீற பல முறை செயல்பட்டுள்ளன. சில நீதிமன்றத் தீர்ப்புகள் எல்லை மீறுவது போல் அமைந்துள்ளன.
நிர்வாகத்துறை, சட்டத்துறை ஆகியவற்றைக் காட்டிலும் தங்களை உயர்வானதாக நீதித்துறை கருதுவதை ஏற்க முடியாது. சில சமயங்களில், சட்டத்துறையும் எல்லை மீறி செயல்படுகிறது. குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதில் நீதித்துறை தலையிடாத வகையில் 39ஆவது சட்டத்திருத்தம் உள்ளது" என்றார்.