மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஐக்கிய முற்போக்கு அமைச்சரவையில் 2009-11ஆம் ஆண்டில் ரயில்வேத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது கொல்கத்தாவின் கிழக்கு - மேற்கு எல்லை போக்குவரத்து மேம்பாட்டிற்காக, கிழக்கு - மேற்கு இணைப்புத் திட்டம் வடிவமைக்கப்பட்டது.
இந்தத் திட்டம் நிறைவடைந்து அதன் தொடக்க விழா நேற்று ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்றது. அதில் மம்தாவை விருந்தினராக அழைக்கவில்லை. இது குறித்து தான் மிகவும் வேதனையடைந்ததாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், ’கிழக்கு - மேற்கு மெட்ரோ இணைப்புத் திட்டம் எங்களின் கடும் உழைப்பால் உருவானது. இதற்கான ஒப்பதலை பெற கண்ணீர் விடாதக் குறையாக நாங்கள் பாடுபட்டோம். இதன் திறப்பு விழா குறித்து தகவல்கூட தெரிவிக்காதது பெரும் வருத்தமளித்தது’ என்றார்.
நாட்டின் அரசியல் சூழல் மோசமாகவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாஜகவிடம் சரணடைந்துவிட்டதாக குற்றஞ்சாட்டிய மம்தா, மாநில கட்சிகள் பலமாக உள்ள பகுதிகளில் காங்கிரசுக்கு இருப்பே இல்லை என விமர்சித்துள்ளார்.
என்.பி.ஆர் எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம் என மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த கெஜ்ரிவால்