மத்தியப்பிரதேச மாநிலத்தின் தார் மாவட்டம், மனாவார் தேசில் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின தொழிலாளி ஷோப்ராம். இவர் தனது மகனின் 10ஆம் வகுப்புத் தேர்வுக்காக, மகனை அழைத்துக்கொண்டு சுமார் 85 கி.மீ., மிதிவண்டியில் பயணித்து தேர்வு மையத்தை அடைந்துள்ளார்.
இது குறித்து ஷோப்ராம் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'நான் ஒரு விவசாயி. பெரும்பாலான நேரங்களில் கூலி வேலைக்குச் செல்வேன். எனது மகனை நன்றாக படிக்க வைக்க விரும்புகிறேன். இதற்கிடையே இந்த ஊரடங்கு காலத்தில் அவனுக்கு 10ஆம் வகுப்பு தேர்வு இருந்தது. ஊரடங்கு காலம் என்பதால், எங்கள் பகுதியில் பொதுப்போக்குவரத்து இல்லை. என்னிடம், மோட்டார் இருசக்கர வாகனமும் இல்லை. அதனால் எனது மிதிவண்டியிலேயே மகனை அழைத்துக்கொண்டு தேர்வு மையத்துக்குக் கிளம்பினேன்' என்றார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 18) ஷோப்ராமின் மகன் ஆஷிஸுக்கு கணிதத் தேர்வு இருந்தது. அதனால் தந்தையும் மகனும் கடந்த திங்கட்கிழமை நண்பகல் நேரத்திலேயே வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார்கள். திங்கட்கிழமை இரவில் 'மண்டவ்' எனும் பகுதியில் இருவரும் ஓய்வு எடுத்துவிட்டு, மறுநாள் தாரில் உள்ள தேர்வு மையத்துக்குத் தேர்வு தொடங்கும் சில நிமிடங்களுக்கு முன்னர் சென்றுள்ளனர்.
ஆஷிஸுக்கு தேர்வு வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை இருப்பதால், சமைத்து சாப்பிடுவதற்கு இருவருக்கும் தேவையான உணவு தானியங்களை பத்திரமாக எடுத்து சென்றுள்ளார், ஷோப்ராம். ஏனெனில் தார் நகரில் ஷோப்ராமுக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லை.
இதற்கிடையே ஆஷிஸ் நேற்று (ஆகஸ்ட் 19) சமூக அறிவியல் தேர்வை எழுதியுள்ளார்.
இது குறித்து ஆஷிஸ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ' எனக்கு பெரிய அலுவலராக வரவேண்டும் என்ற லட்சியம் இருக்கிறது. அந்த லட்சிய முயற்சி நின்று விடக்கூடாது என்பதற்காக, நானும் எனது தந்தையுடன் சேர்ந்து மிதிவண்டியை சிறிதுநேரம் அழுத்தினேன்' என்றார்.
இதுகுறித்து அறிந்த தார் மாவட்ட குற்றவியல் நீதிபதி அலோக் சிங், 'அரசு அதிகாரிகளை ஷோப்ராம் அணுகியிருந்தால், அரசு அவருக்கு நிச்சயம் உதவி இருக்கும்' என்றார்.
இதுகுறித்து மாவட்ட பழங்குடியின உதவி ஆணையர் பிரிஜேஷ் சந்திர பாண்டே கூறுகையில், 'தந்தை மற்றும் மகன் இருவரின் கடினமான முயற்சிகளைப் பற்றி நான் அறிந்தேன். இது உண்மையில் ஊக்கமளிக்கிறது. ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை அவர்கள் இங்கு தங்க வேண்டியிருப்பதால், அவர்களின் உறைவிடம் மற்றும் உணவுக்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம், மேலும் அவர்கள் தங்கள் கிராமத்திற்கு திரும்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளையும் செய்வோம்' என்றார்.
இதையும் படிங்க: மனைவியின் உயிரை மீட்ட கணவரின் காதல் - கர்நாடகாவில் ஒரு நெகிழ்ச்சி கதை!