சீனா உள்ளிட்ட நாடுகளில் 'கொவிட்-19' (கொரோனா வைரஸ்) பாதிப்புப் பரவி வருகிறது.
இதனிடையே, சீனாவிலிருந்து ஜப்பானின் யோகோஹாமா துறைமுகம் வந்த 'டைமண்ட் பிரின்சஸ்' என்ற சொகுசுக் கப்பலில் முதியவர், ஒருவருக்கு கொவிட்-19 பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்தக் கப்பல் அங்கேயே சிறைப்பிடிக்கப்பட்டது.
இதில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சோலானி தாக்கூர் (24) என்ற பெண் உட்பட 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில், சொகுசுக் கப்பலில் சிக்கியுள்ள, தன் மகளை உடனடியாக மீட்குமாறு சோனாலியின் தந்தை தினேஷ் தாக்கூர் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால், அதுகுறித்து இதுவரை பிரதமர் மோடியிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என அவர் தற்போது கவலைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தினேஷ் பேசுகையில், "பிரதமர் நரேந்திர மோடியிடம், முதலமைச்சர் உத்தவ் தாக்ரே, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி ஆகியோருக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன்.
ஆனால், என் மகள் எப்போது நாடு திரும்புவாள் என்பது குறித்து இதுவரை யாரிடமிருந்தும் எனக்குப் பதில் வரவில்லை.
என் மகளைப் போன்று ஏராளமான இந்தியர்கள் பிரதமர் நரேந்திர மோடி அரசு, தங்களை மீட்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
என் மகளுடன் பேசினேன். இன்றும் அவளைப் பரிசோதனைச் செய்தார்களாம். இதுவரையில் அவளுக்கு நோய்த்தொற்று ஏற்படவில்லை எனத் தெரிவித்தாள்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருக்கும் அதே கப்பலில் என் மகளும் பெரும் ஆபத்தில் உள்ளார். எனவே, அவரை விரைவில் மீட்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் உள்ள மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் குழுவினரில் 634 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இந்தியா - அமெரிக்கா உறவு எப்படிப்பட்டது? - சிறு தொகுப்பு