உத்தரப் பிரதேசத்தில் புராண்பூர் பகுதியில் உள்ள சோஹன்னா கிராமத்தைச் சேர்ந்தவர் குர்முக் சிங் (55). இவருடைய மகன் ஜஸ்கரன் (16). கடந்த திங்கட்கிழமை இரவு குர்முக்கின் மனைவி, மகள் ஆகியோர் வெளியே சென்றிருந்தனர். அப்போது, வீட்டிலிருந்த குர்முக் சிங், தனது மகனிடம், தனக்கு பால் எடுத்து வருமாறு கூறியுள்ளார். ஆனால், ஜஸ்கரன் கொண்டு வந்த டம்ளரில் பாதியளவு தான் பால் இருப்பதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த தந்தை, தனது மகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இச்சம்பவத்தின் போது வீட்டிலிருந்த குர்முக் சிங்கின் சகோதரர் அவ்தார் சிங் ஜஸ்கரனுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். இதில், கடுப்பான குர்முக் சிங் தான் வைத்திருந்த துப்பாக்கியால் இருவரையும் இரக்கமின்றி சுட்டுக் கொன்றுள்ளார். பின்னர், தான் செய்தது தவறு என்பதை உணர்ந்த குர்முக், அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர், வீட்டிற்கு வந்த குர்முக் மனைவி, மகள் ஆகியோர் குடும்பத்தினர் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, குர்முக்கின் மற்றொரு சகோதரன் பல்வீர் சிங் காவல் துறையிடம் அளித்த புகாரின் பேரில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு டம்ளர் பாலுக்காக, மகன், தனது சகோதரர் ஆகிய இருவரையும் சுட்டுக்கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கல்லூரி மாணவர் கொலை: திமுக கவுன்சிலர் உள்பட 6 பேர் கைது!