தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான பெருநகர ஹைதராபாத் மாநகராட்சியில் டிசம்பர் 1ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் மாநிலத்தை ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.), பாஜக, காங்கிரஸ் ஆகியவை தனித்தனியே களம் காண்கின்றன. 150 வார்டுகள் கொண்ட ஹைதராபாத் மாநகராட்சியில் தற்போது பரப்புரை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.
இந்நிலையில் இன்று(நவ.28) பாஜக வேட்பாளரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட அவர், “முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதியும் (டி.ஆர்.எஸ்), அசாதுதீன் ஓவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியும் (ஏஐஎம்ஐஎம்) மறைமுகமாக கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றன. ஓவைசி கட்சியின் வெற்றிவாய்ப்பை உறுதி செய்யவே டி.ஆர்.எஸ் வேலை செய்கிறது.
பாக்யநகரின் தலைவிதி ஒரு குடும்பத்தின் கையிலும், அந்த குடும்பத்தின் நண்பர்களது கையிலும் சிக்கி இருப்பது துரதிர்ஷ்டவசமானது. பின்கதவிலிருந்து வளர்ச்சி வெளியேறிவிட்டது.
தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் மகனும் தெலங்கானா நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சருமான கே.டி. ராமராவ் ஹைதராபாத்தை 'பாக்யநகர்' என்று பாஜக தலைவர்கள் குறிப்பிடுவதை எதிர்க்கிறார். ஹைதராபாத்தின் பெயரை மாற்றவிட மாட்டோம் என்று கே.டி. ராமராவ் கூறி இருக்கிறார்; இது சரியல்ல.
ஹைதராபாத்தின் வளர்ச்சி - முன்னேற்றம் - மேம்பாடு போன்றவற்றை உறுதி செய்யவே ஜி.ஹெச்.எம்.சி தேர்தலில் பாஜக போட்டியிடுகிறது. ஆனால், அவர்களோ பெருநகர ஹைதராபாத் மாநகராட்சியை தங்களது சொத்தைப் போல சொந்தமாக வைத்திருக்க இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 'குடும்ப நண்பர் தனியார் லிமிடெட்' கம்பெனியாக இருக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு தான் செல்லும். தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிக்கு தான் செல்லும்.
ஹைதராபாத்தின் பாஜகவின் மேயரை தேர்ந்தெடுப்பதா அல்லது வகுப்புவாத அரசியல் செய்யும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிக்கு வாக்களித்து மேயரை தேர்ந்தெடுப்பதா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்”என்றார்.
இதையும் படிங்க : உள்ளாட்சி தேர்தலுக்கு அமித் ஷா பரப்புரை - தெலங்கானாவை குறிவைக்கும் பாஜக!