தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் காஷ்மீர் மாநிலத்தில் விரைந்து 4ஜி இணைய சேவை விரைந்து கிடைக்க வழி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அந்த கடிதத்தில் பரூக் அப்துல்லா மேலும் கூறியிருப்பதாவது:-
காஷ்மீரில் கோவிட்-19 (கரோனா வைரஸ்) பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக காஷ்மீரின் முக்கியப் பகுதிகள் முடங்கிபோய் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தின் பல பகுதிகள் மூடப்பட்டுள்ளன.
கடந்தாண்டு (2019) ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு (மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து) பின்னர் மாநிலத்தில் மாணவர்கள், வணிகர்கள் என பலதரப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கு ஏற்கனவே வரையறுக்கப்பட்ட 2ஜி இணைய சேவை போதுமானதாக இல்லை. ஆகவே மக்களின் துன்பம் நீங்கும் பொருட்டு, 4ஜி இணைய சேவை விரைந்து கிடைக்க ஏற்பாடு செய்ய கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து (சட்டப்பிரிவு 370) வாபஸ் பெறப்பட்டு மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. அதன்படி காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை அல்லாத யூனியனாகவும் செயல்பட்டுவருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தின் முக்கியத் தலைவர்கள் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: மேக்-பிணைப்புடன் இணைய சேவை பயன்படுத்த ஜம்மு-காஷ்மீருக்கு அனுமதி