ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் முன்னாள் முதலமைச்சர்களுமான ஃபருக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் வீட்டு காவலில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்நிலையில், ஃபருக் அப்துல்லா வீட்டு காவலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தனது தந்தையும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரான ஷேக் அப்துல்லாவின் நினைவிடத்திற்கு ஃபருக் அப்துல்லா சென்று மரியாதை செலுத்தினார். அப்துல்லாவின் மனைவி மோய்லி, பேரன் அதீம் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.
இதுகுறித்து ஃபருக் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், "எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இப்போது கிடைத்துள்ள சுதந்திரம் நிரந்தரமானது அல்ல. உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டால்தான் அது முழுமையான சுதந்திரம். அவர்களையும் அரசு விடுதலை செய்யும் என நம்புகிறேன்" என்றார்.
இதையும் படிங்க: சிந்தியா போன்ற நபர் எங்கள் கூட்டணியில் இல்லை - அஜித் பவார்