சாதாரண சூழ்நிலைகளில், ஆண்டின் இந்நேரத்தில் விவசாய நிலங்கள், சந்தைகள் ராபி விளைச்சல் காரணமாக பரபரப்புடன் இயங்குவதை கண்டிருப்போம். உலகளவில் தற்போது பரவிவரும் புதிய வைரஸான கரோனா (கோவிட்-19) பெருந்தொற்று காரணமாக, விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் மதிப்பீடுகள், ஆராய்ச்சி, கொள்கை ஆலோசனை சேவைகளை வழங்கும் இந்தியப் பகுப்பாய்வு நிறுவனம் (CRISIL) மேற்கொண்ட ஆய்வு விவசாய சமூகத்தின் நாடு தழுவிய துயரத்தை பிரதிபலிக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, கோதுமை மற்றும் கடுகு விளைச்சல் 90 சதவீதம் குறைந்துள்ளது.
கோதுமை சாகுபடிக்குப் பெயர் பெற்ற இரண்டு மாநிலங்களான பஞ்சாப், ஹரியானாவில் இன்னும் அறுவடை தொடங்கப்படவில்லை. இப்பொழுது ஏற்பட்டிருக்கும் தேக்க நிலைக்கு நான்கு முக்கியக் காரணங்களை மேற்கண்ட ஆய்வு கோடிட்டுக் காட்டியுள்ளது. இந்த ஆண்டு ராபி அறுவடையில் தாமதங்கள், ஊரடங்குக்கு மத்தியில் விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை, போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாதது மற்றும் மந்தமான சந்தை ஆகியவை விவசாயிகளை இந்த மோசமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளன.
தங்கள் விளைப்பொருட்களை வாங்குபவர்கள் இல்லாததால் பெரும்பான்மையான விவசாயிகள் நிச்சயமற்ற நிலையில் உள்ளனர். போக்குவரத்து வசதிகள் இல்லாததால் விளைப்பொருள்கள் தேக்க நிலையில் இருப்பதால், பழம் மற்றும் காய்கறி விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
விவசாயிகள் பல டன் மகசூலை இலவசமாக விநியோகிக்கிறார்கள். குறிப்பாக திராட்சை உள்ளிட்ட விவசாயப் பொருட்கள் கடும் சரிவில் உள்ளன. சிலர் கால்நடைகளை தங்களின் விவசாயப் பண்ணைகளில் மேய்ச்சலுக்கு விடுகிறார்கள். இந்த கோடையில் லாபம் கிடைக்கும் என்று நம்பிய மாம்பழ விவசாயிகள், மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
நிறுவன ஆதரவு அல்லது ஊதிய விலைகள் இல்லாமல், பல மாநிலங்களில் உள்ள விவசாயிகள் இந்த ஆண்டின் அறுவடை குறித்த நம்பிக்கையை இழந்துவருகின்றனர். உடனடி உணவு நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு தேசமாக நாம் அவர்களின் முயற்சிகளுக்கு நியாயமான விலை கொடுக்கத் தயங்குகிறோம்.
உலகளவில் ரூ.13 கோடி மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாகக் கணக்கிட்டுள்ளது. கோவிட் -19 இறுதிக்குள், இந்த எண்ணிக்கை ரூ.26 கோடி வரை அதிகரிக்கப்போகிறது. இத்தகையச் சூழ்நிலைகளுக்கு மத்தியில், எந்தவொரு பயிர் விளைப்பொருட்களையும் வீணடிப்பது முட்டாள்தனம்.
சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் ஒரு புதுமையான யோசனையைப் பரிந்துரைத்தார். தேசிய ஊரக வேலை உத்தரவாதம் உணவு தானியங்களின் வடிவத்தில் ஊதியத்தை வழங்க அனுமதிக்கிறது. இதைச் செயல்படுத்த முடிந்தால், வேலைவாய்ப்பு, உணவு தானிய நுகர்வு இரண்டையும், ஒரே நேரத்தில் அடைய முடியும்.
அதே நேரத்தில், அரசாங்கங்கள் வேகமாக அழிந்துபோகக்கூடிய பொருட்களை வாங்கி, அவற்றை விரைவாக குளிர் சேமிப்பு மையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த சேமிக்கப்பட்ட விளைப்பொருட்களை தேவை அடிப்படையில் ஏற்றுமதி செய்யலாம் அல்லது உள்நாட்டு சந்தைகளுக்குக் கொண்டு வரலாம்.
அசாதாரண காலங்களில், அசாதாரண முடிவுகளால் மட்டுமே தேசத்தைக் காப்பாற்ற முடியும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இதையும் படிங்க: 'பெற்றோரின் சண்டை குழந்தைகளை பாதிக்கும்'- உயர் நீதிமன்றம்