மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடும் பனியை பொருட்படுத்தாமல் டெல்லி எல்லையில் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மத்திய அரசு ஏற்கெனவே ஐந்து கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட மறுத்துள்ளனர்.
வேளாண் சட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டால் மட்டுமே தங்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் போராட்டம் இன்றுடன் 28ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், கூடுதல் மாவட்ட நீதிபதி திவாகர் சிங், நொய்டா நகர நீதிபதி உமா சங்கர் ஆகியோர் போராட்டக்காரர்களை சந்தித்து பேசினர்.
அப்போது விவசாயிகளிடம் பேசிய நீதிபதி திவாகர் சிங், விவசாயிகளின் நிலத்தை அரசு கைப்பற்றி விடும் என்று தவறான தகவல் பரவி வருவதாகவும், ஆனால் அப்படி ஏதும் நடக்க வாய்ப்பில்லை என போராட்டக்காரர்களிடம் விளக்கினார்.
இருப்பினும், புதிய வேளாண் சட்டம் குறைந்த பட்ச ஆதரவு விலையை நீக்குவதற்கு வழிவகுக்கும், அதனால் இந்த சட்டங்களை முழுமையாக நீக்காவிட்டால் தங்களின் போராட்டம் தொடரும் என்றும் விவசாயிகள் அவர்களிடம் தெரிவித்தனர்.
முன்னதாக, விவசாயிகள் போராட்டக்களத்தில் இன்று யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
இதையும் படிங்க:குறைந்தபட்ச ஆதரவு விலையை தொடர எழுத்துப்பூர்வமான உறுதி அளிக்கப்படும் - மத்திய அரசு