மத்திய அரசு சார்பாக கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் மசோதாக்களுக்கு விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நாடு தழுவிய அடைப்பிற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் கட்சி சார்பாக ஆதரவளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்கள் குறித்து விவசாயிகளுடன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காணொலி மூலம் கலந்துரையாடினார்.
அந்த வீடியோவை பகிர்ந்த ராகுல் காந்தி, ''விவசாயிகளுடன் பேசிய பிறகு ஒரு விஷயம் மட்டும் தெளிவாகியுள்ளது. அவர்களுக்கு மோடி அரசு மீது துளிக்கூட நம்பிக்கை இல்லை. அனைவரின் குரலும் நம் விவசாயிகளின் வலுவான குரலுடன் உள்ளது. இன்று, இந்த விவசாய மசோதாக்களை எதிர்ப்பதற்கு முழு நாடும் ஒன்றாக இணைந்துள்ளது'' என பதிவிட்டுள்ளார்.
அந்தக் கலந்துரையாடலில் பிகாரைச் சேர்ந்த விவசாயி தீரேந்திர குமார் பேசுகையில், '' இது கண்மூடித்தனமான சட்டத்திருத்தம். இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் ஏழைகளும், விவசாயிகளும் சுரண்டப்படுவார்கள்'' என்றார்.
அவரைத்தொடர்ந்து ஹரியானாவைச் சேர்ந்த விவசாயி ராகேஷ் பேசுகையில்,'' இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு ஆதரவானது என்றால் ஏன் இன்று வரை எம்எஸ்பியை அரசு நிர்ணயிக்கவில்லை. விவசாயிகள் கமிஷன் ஏஜெண்ட்டுகளுடன் வேலை செய்து வருகின்றனர். ஒருவேளை இந்த மசோதா நடைமுறைக்கு வந்தால், கார்ப்பரேட்டுகளின் தயவில் விவசாயிகள் வாழ வேண்டியிருக்கும். இதன்மூலம் தொழிலதிபர்கள் அதிக லாபம் பார்ப்பார்கள். இதற்கு முன்னதாக விவசாயிகள், தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் அரசு செய்தவை எல்லாவற்றையும் இப்போது உள்ள அரசு தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது'' என்றார்.
இதனைத்தொடர்ந்து ராகுல் காந்தி கூறுகையில், ''இந்த மசோதாக்களை நாம் எதிர்க்க வேண்டும். விவசாயிகளுக்காக மட்டுமல்ல, எதிர்கால இந்தியாவுக்கு சேர்த்து எதிர்க்க வேண்டிய நிலை உள்ளது. விவசாயியின் குரல் இளைஞர்களிடமும், ராணுவத்திலும், காவல் துறையிலும் உள்ளது. அந்தக் குரல் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த குரலைப் பயன்படுத்தி தான் நாம் சுதந்திரம் பெற்றோம். மீண்டும், விவசாயிகளின் குரலால் இந்தியா அதன் சுதந்திரத்தைப் பெறும்'' என்றார்.
இதையும் படிங்க: கந்தர்வக்குரலோன் எஸ்பிபிக்கு கடற்கரை மணலில் சிற்பாஞ்சலி செலுத்திய சுதர்ஸன் பட்நாயக் !