ஆந்திர மாநிலம் அனந்தபுரத்திலுள்ள சஞ்சீவபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கிருஷ்ணய்யா, ஸ்ரீனிவாஸ். இவர்கள் இருவரும் இணைந்து புதிதாக வாழைத்தோட்டம் ஒன்றினை விலைக்கு வாங்கியுள்ளனர்.
இந்நிலையில், திடீரென அரசு மின் அலுவலர்கள் கிருஷ்ணய்யா, ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் வாழைத் தோட்டத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அரசுக்குச் சொந்தமான நிலத்தில் சட்டத்திற்கு புறம்பாக அடிகுழாய் பதித்து தண்ணீர் பயன்படுத்திவந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மின்வாரிய ஊழியர்கள் தண்ணீரை நிறுத்தியதோடு மின்சாரத்தையும் துண்டித்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த கிருஷ்ணய்யா, ஸ்ரீனிவாஸ் ஆகிய இருவரும் துண்டிக்கப்பட்ட மின்னிணைப்பை இணைப்பதற்கு மின்கம்பத்தில் ஏறினர்.
இதனைக்கண்டு அச்சமடைந்த அப்பகுதி மக்கள், அவர்களை மின்கம்பத்திலிருந்து கீழே இறங்குமாறு வலியுறுத்தினர். வெகுநேரம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்பு அவர்கள் கீழே இறங்கினர்.
இது குறித்து ஸ்ரீனிவாஸும், கிருஷ்ணய்யாவும் கூறும்போது, ‘வாழைத்தோட்டத்தை நாங்கள் வேறு ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கினோம். தற்போது வாழை சாகுபடி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்ட சிக்கல்களை விரைந்து நீதிமன்றத்தை நாடி தீர்ப்போம்.
தற்போது தண்ணீரையும், மின்சாரத்தையும் நிறுத்தினால் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும் என எவ்வளவோ எடுத்துக் கூறியும் அரசு மின் வாரிய ஊழியர்கள் செவிமடுக்கவில்லை. நாங்கள் தெலுங்கு தேச கட்சி என்பதால் எங்களை ஆளும் கட்சியினர் புறக்கணிக்கின்றனர்’ என வருத்தம் தெரிவித்தனர்.