தெலங்கானா மாநிலத்தின் கரீம்நகர் மாவட்டத்தை அடுத்த ரெட்டி பல்லி கிராமத்தில் வசித்து வருபவர் மண்டலா ராஜி ரெட்டி. விவசாயியான இவர், இன்று பெடப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கல்வா ஸ்ரீரம்பூர் தாசில்தார் அலுவலகம் முன் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், கல்வா ஸ்ரீரம்பூர் தாசில்தார் வேணுகோபால், வி.ஆர்.ஓ குருமூர்த்தி, சுவாமி ஆகியோர் தனது 20 ஏக்கர் நிலத்தை தனது பெயரில் மாற்றாமல், தனது தந்தையின் நிலத்தை வேறொருவருக்கு வழங்கி மோசடி செய்ததால் மிகுந்த வேதனையடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து, ராஜி ரெட்டியின் மகன் கூறுகையில், "இந்த நிலம் எங்கள் முன்னோர்கள் காலத்தில் இருந்தே எங்களுக்கு சொந்தமானது. எங்கள் நிலத்தைக் கையகப்படுத்தியவர்களிடம் இருந்து மீட்க எனது தந்தை இரண்டு வருடங்களாக தாசில்தார் அலுவலகத்தையே சுற்றி வந்தார். ஆனால் யாரும் சரியாக பதிலளிக்கவில்லை. இறுதியாக அவர் நம்பிக்கையை இழந்து இன்று காலை தற்கொலை செய்துகொண்டார். அரசு அலுவலர்களின் இதுபோன்ற செயலால் எனது தந்தை தற்கொலை செய்துகொண்டார்” என்று கூறினார்.
இதையடுத்து, பெடப்பள்ளி காவல் துணை ஆணையர் வி.சத்யநாராயணா, அரசு அலுவலர்கள் உள்பட நான்கு பேர் மீது ஐபிசி306 (தற்கொலைக்கு தூண்டுதல்) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.