டெல்லி: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாவுக்கு மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதுமட்டுமல்லாது நாடு முழுவதும் இதற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன,
சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் என மத்திய அரசால் நிறைவேற்ற வேளாண் மசோதா, விவசாயிகள், பாட்டாளிகளுக்கு எதிரானது என விவசாயிகளும், அரசியல் தலைவர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், ஸ்வராஜ் அபியான் அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் இதை கடுமையாக விமர்சித்துள்ளார்.
வேளாண் மசோதாவுக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட யோகேந்திர யாதவ் நமது ஈடிவி பாரத் செய்தியாளர்கள் இதுகுறித்து பேட்டியளித்தார். அப்போது அவர், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கடும் கோபத்தில் உள்ளனர். எதிர்க்கட்சிகள்தான் இந்த போராட்டங்களுக்கு செலவு செய்வதாக பிரதமர் மோடி குறிப்பிடுகிறார். இது விவசாயிகளுக்கு ஆதரவான மசோதா கிடையாது. விவசாயிகள், பாட்டாளிகளுக்கு எதிரானது. ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த விவசாயிகளும்கூட இந்த மசோதாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தார்.
மேலும் அவர், விவசாயிகள் இந்த மசோதாவுக்கு எதிராக செப்டம்பர் 25ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளனர். நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து இந்த மசோதாவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதற்கு எதிரான பெரும் போராட்டத்தை நாம் பார்க்கப்போகிறோம் என்றார்.
பாஜகவினர் இந்த மசோதாவை பாராட்டி வருகின்றனர். பிரதமர் மோடி இதை வரலாறு காணாத சிறப்பு நகர்வு எனக் கூறி விவசாயிகளை சமாதானம் செய்ய முயற்சிக்கிறார் எனவும் யோகேந்திர யாதவ் தெரிவித்தார்.