குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த பாலிவுட் நடிகர் பர்ஹான் அக்தர், போராட்டத்தில் வந்து கலந்துகொள்ளும்படி மக்களுக்கு அழைப்பு விடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐபிஎஸ் அலுவலர் சந்தீப் மிட்டல், "நீங்கள் குற்றத்தில் ஈடுபட்டுள்ளீர்கள். எதிர்பாராதவிதமாக இதை நீங்கள் செய்யவில்லை. சட்டத்தை புரிந்து கொள்ளுங்கள்" என பதிவிட்டார்.
இதையடுத்து, அடல்ட் படங்களை சந்தீப் மிட்டல் ட்விட்டரில் லைக் செய்துள்ளதை நெட்டிசன்கள் வெளியிட்டனர். பின்னர் பதிவிட்ட மிட்டல், "பர்ஹான் அக்தரை கேள்வி கேட்டதால் என் சமூக வலைதள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஹேக் செய்தவர்கள் மீது புகார் அளித்துள்ளேன். இதுபோன்ற சமூக விரோதிகளிடம் சிக்கமாட்டேன்" என பதிவிட்டார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவளித்ததால்தான் நெட்டிசன்களின் இலக்காக நான் சிக்கியுள்ளேன் எனவும் மிட்டல் தெரிவித்துள்ளார். சர்ச்சையில் சிக்கிய ஐபிஎஸ் அலுவலரை கலாய்த்து நெட்டிசன்கள் தொடர்ந்து பதிவிட்டுவருகின்றனர். 2011ஆம் ஆண்டு பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தபோது அங்கு சந்தீப் மிட்டல் டிஐஜியாக இருந்துள்ளார். துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததற்கு காரணம் மிட்டல்தான் என பலர் குற்றஞ்சாட்டியிருந்தனர். இதுபோன்ற பல சர்ச்சைகளில் மிட்டல் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'அஸ்ஸாம் மக்களின் உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது' - அஸ்ஸாம் முதலமைச்சர்