இந்தியாவின் தேசிய கண் கொடை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 25 முதல் செப்டம்பர் 8 வரை அனுசரிக்கப்பட்டுவருகிறது. இதை முன்னிட்டு பொதுமக்களுக்கு கண்தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு புதுச்சேரி அரசு சுகாதாரத் துறை தனியார் மருத்துவமனையுடன் இணைந்து 'கண்தானம் செய்வோம்' என்பதனை வலியுறுத்தி தேசிய தலைவர்களின் படங்களை வரைந்து கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் வைத்துள்ளனர்.
ஓவியர்கள் பலர் ஒன்றுதிரண்டு வரைந்த அப்துல் கலாம், அன்னை தெரெசா, காந்தியடிகள், பாரதியார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் ஓவியங்களை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
பனை ஓலை மட்டை, பழைய நெகிழி புட்டிகள், தென்னை ஓலை, வைக்கோல் உள்ளிட்டவைகளை கொண்டு வித்தியாசமான முறையில் தீட்டப்பட்டிருந்த ஒவ்வொரு ஓவியங்களின் மேல்பகுதியிலும் கண்தானம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. மேலும் இந்த ஓவியங்களில் இருந்த ஆங்கில படம் ஹல்க் கதாநாயகன் ஓவியங்கள் சிறுவர்களை வெகுவாக கவர்ந்து ஈர்த்தது.