கொரோனா வைரஸ் பரவிவரும் சூழலில் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர்களை இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி எம்.பி. வசந்தகுமார் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை டெல்லியில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து வசந்தகுமார் தனது மனுவில், "எனது தொகுதியான கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் ஈரானில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவந்தனர். கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவிவரும் சூழலில் ஈரானிலும் அது தொடர்பான பாதிப்புகள் உள்ளதால் அங்கு பதற்றம் நிலவிவருகிறது.
இதனால் கன்னியாகுமரி மீனவர்கள் தாயகம் திரும்ப விரும்புகின்றனர். ஆனால், போதிய விமான வசதி இல்லாத காரணத்தினால் அவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர். ஈரானில் உள்ள தமிழ்நாடு மீனவர்களுக்கு போதிய உணவுகூட கிடைக்கவில்லை தங்குவதில் சிக்கல் இருந்துவருகிறது.
எனவே, அவர்களை இந்தியாவுக்கு அழைத்துவந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் சிகிச்சை மையத்தில் வைத்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்களை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து கேட்டறிந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், "ஈரானில் என்ன மாதிரியான பரிசோதனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து தெரியவில்லை. எனினும், நமது நாட்டிலிருந்து மருத்துவர்களை அந்நாட்டிற்கு அனுப்பியுள்ளோம். அவர்களைப் பரிசோதனைகளுக்குள்படுத்திய பின்னர் இங்கு அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: 100 விழுக்காடு வருகையை பதிவு செய்த திமுக உறுப்பினர்
!