உலகளாவிய பெருந்தொற்றுநோயான கரோனாவை எதிர்கொள்ள ஏழை எளிய மக்களுக்கு அடுத்த ஐந்து மாதங்களுக்கு பி.எம்.ஜி.கே.ஏ.ஒய் திட்டத்தின் கீழ் விலையில்லா உணவு தானியங்கள் ரேஷன் கடைகளின் வழியே வழங்கப்படுமென பிரதமர் மோடி நேற்று (ஜூன் 30) அறிவித்தார்.
இது தொடர்பாக ஊடகங்களிடையே பேசிய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், "நாட்டு மக்கள் சார்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா யோஜனா நீட்டிக்கப்படுமா இல்லையா என்பதில் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் பிரதமர் அதை நவம்பர் வரை நீட்டித்துள்ளார். இது ஒரு வரலாற்று நடவடிக்கை. நாட்டின் ஏழை எளிய மக்களின் நலனைக் கருத்தில்கொண்ட அரசு என மீண்டும் நிறுவி இருக்கிறார்.
கோவிட் -19 பரவலைத் தடுக்க மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு நடைமுறையில் உள்ள இந்த நேரத்தில், பிரதான் மந்திரி கரிப் அன்ன யோஜனா (பி.எம்.ஜி.ஏ) திட்டத்தின் கீழ் மக்களுக்கு உணவு தானியங்களை வழங்கும் பொறுப்பு இந்திய உணவுக் கழகத்திடம் (எப்.சி.ஐ) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு தானியங்கள் கடந்த மே 15ஆம் தேதி முதல் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தொடரும் கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் விளிம்புநிலை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பிரதமர் மோடி நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ரேஷன் கடைகளில் விலையில்லாமல் உணவு தானியங்கள் வழங்கப்படும் என அறிவித்தார். பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா (பி.எம்.ஜி.கே.ஏ.ஒய்) திட்டத்தின் கீழ் பொது விநியோக முறையின் அடிப்படையில் ரேஷன் பொருள் விநியோகிக்கப்படும். 80 கோடி பயனாளர்களுக்கு இந்த திட்டம் சென்றடைய ஏற்பாடு செய்யப்படும். இந்த ஐந்து மாதங்களில் அரசாங்கம் ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் 5 கிலோ கோதுமை/அரிசி வழங்கப்படும். ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ சன்னா (சுண்டல்) விலையில்லாது வழங்கப்படும்.
இந்திய உணவுக் கழகத்திடம் போதுமான அளவு உணவு தானியங்கள் இருப்பில் உள்ளன. மாநில அரசுகள் கழகத்திடமிருந்து இதனை பெற்றுக்கொள்ளலாம். இதற்கான போக்குவரத்து செலவு, விநியோகஸ்தர்களின் செலவீனம் உள்ளிட்ட விநியோகத்திற்கான முழு செலவையும் மத்திய அரசு ஏற்கும். இந்தக் கடினமான காலத்தில் ரேஷன் உணவுப் பொருள்களை விநியோகிப்பது மாநில அரசுகளின் பொறுப்பு. உணவுப்பொருள்களை அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கும் தானியங்களை ரேஷன் வழியாக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
வரும் 2021 மார்ச் மாதத்திற்கு ‘ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்ட்’ திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம்" என்று அவர் கூறினார்.
இந்த ஐந்து மாத காலத்தில், 80 கோடிக்கும் அதிகமான பயனாளிகளை சென்றடைய உள்ள இந்த திட்டத்திற்காக மத்திய அரசு ரூ. 90,000 கோடி வரை செலவிடப்பட உள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இதற்காக ரூ. 1.5 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.