புதுச்சேரி மாநில கடற்கரை சாலை தலைமை செயலகத்தில் ஊரடங்கு குறித்து அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்கள், மருத்துவத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
இரண்டு மணி நேர ஆலோசனைக்குப் பிறகு முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம், "அதிகரித்துவரும் கரோனா பரவல் காரணமாக ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை புதுச்சேரியில் ஊரடங்கு நீடிக்கப்படும்.
ஏற்கனவே உள்ள மதம், பொது, விளையாட்டுச் சார்ந்த தடை தொடரும். மாநிலத்தில் அனைத்து கடைகளும் 8 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டிருந்தது.
தற்போது இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அமலிலிருக்கும்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு மற்ற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வருவதற்கு இ-பாஸ் கட்டாயம். அதேபோல வெளியே செல்வதற்கும் இ-பாஸ் அவசியம்" எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், "மாஹே மாநிலத்திலிருப்பவர்கள் கேரளா அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதேபோல ஏனாம் பகுதியிலிருப்பவர்கள் ஆந்திர அரசின் விதிமுறைகளை பின்பற்றவேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் புதுச்சேரியில் ஊரடங்கு இல்லை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் 10 ஆயிரம் படுக்கைகள் தயார்: முதலமைச்சர் நாராயணசாமி