அசாம் மாநிலம் டின்சுகியா மாவட்டத்தில் உள்ள ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் கிணற்றில் கடந்த 8ஆம் தேதி திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், இது சுற்றுவட்டார கிராமங்களிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள மூன்று நபர் கொண்ட உயர்மட்ட ஆணையத்தை பெட்ரோலியத்துறை அமைச்சகம் அமைத்தது.
19ஆவது நாளாக எரியும் தீயை அணைக்க அமெரிக்கா, கனடா நாடுகளிலிருந்து நிபுணர் குழு வரவழைக்கப்பட்டது. பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், அசாம் முதலமைச்சர் சர்பானந்த சோனோவால், மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் விபத்துக்குள்ளான பகுதிகளை பார்வையிட்டனர்.
இதுகுறித்து ஆயில் இந்தியா லிமிடெட் வெளியிட்ட அறிக்கையில், "சிங்கப்பூரிலிருந்து பேரிடர் மேலாண்மை குழு வரவழைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா நிபுணர்களுடன் அவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். தீயை அணைக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். விபத்துக்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர் அமைப்பு, மக்கள் மேற்கொண்ட போராட்டத்தினால் 66 கிணறுகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் 638 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் இழப்பு ஏற்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவர் கூறுகையில், "விபத்துக்குள்ளான அந்த நாளே, தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த வீரர்கள் தீயை அணைக்க கடும் முயற்சி மேற்கொண்டனர். பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள எண்ணெய் கிணறுகளை மூடக் கோரி மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்" என்றார்.
இதையும் படிங்க: சிபிஎஸ்சி மாணவர்கள் பொதுத்தேர்வு: மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு திருச்சி சிவா கடிதம்