சிக்கிம் மாநிலம் இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது. இம்மாநிலம் முழுவதும் மலைப்பாங்கான பகுதிகளாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளை எளிதாக கவரும். இங்கு பல சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக சாங்கு ஏரி, லச்சுங், குருதோங்மார் ஏரி, யும்தாங் பள்ளத்தாக்கு, ரும்டெக் மடம் உள்ளிட்டவை மிகவும் புகழ்பெற்றவையாகும்.
கடந்த சில நாட்களாக சிக்கிம் மாநிலத்தில் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக கடும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் குருதோங்மார் ஏரிக்கு சுற்றுலாச் சென்ற குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 500 பேர் வெளியே செல்ல முடியாமல் சிக்கினர். கடந்த ஐந்து நாட்களாக ஏரிக்கு அருகிலுள்ள மலைவாழ் கிராமத்தினர் அவர்களுக்கு உணவளித்தனர்.
இச்சம்பவம் மாநிலம் முழுதும் அதிர்வலைகளை உருவாக்கியது. பல தரப்பு மக்களும் குருதோங்மார் ஏரியில் சிக்கியவர்களுக்காக பிரார்த்தனை செய்துவந்தனர்.
இந்நிலையில், பாதுகாப்புப் படையினர் ’மாமூத் ஆபரேஷன்’ மூலம் மீட்புக்குழு அமைத்து ஏரியில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்டனர்.