2019ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு வருமானச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜூன் 4ஆம் தேதியிலிருந்து நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ வழங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தற்காலிகமாக தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி இருந்தது.
இதைத் தொடர்ந்து குடும்ப வருமானம், சொத்து சான்றுகள் வழங்கப்படுவதை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதனை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ரெட்டி நல சங்கம், தமிழ்நாடு பிராமணர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வுக்கு முன்பாக நேற்று (ஜூலை 23) விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் சான்றிதழ்களை, மத்திய அரசுப் பணிகள் அல்லது மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால், பிற மாநிலங்களில் இட ஒதுக்கீடு அளிக்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் சான்றிதழை சமர்ப்பிக்க முடியாது. எனவே, எந்தவித நிபந்தனையும் இல்லாமல் சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும்" என வலியுறுத்தினார்.
அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் விஜயநாராயண், "மத்திய அரசினுடைய விதிகளின்படியே தற்காலிகமாக நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கூர்ந்து கேட்டறிந்த நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் விளக்கத்தை உரிய பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு, கல்வி மற்றும் வேலைவாயப்பில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு இயற்றியது. இச்சட்டத்தின் மூலமாக நிதியாண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் உள்ளவர்கள் இந்த இட ஒதுக்கீட்டுச் சலுகையைப் பெற தகுதியுடையவர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த இடஒதுக்கீட்டு சலுகையைப் பெற தாசில்தார்களிடம் இருந்து வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ்களை சமர்ப்பிக்கவேண்டும் என விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.