உலகம் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. இதனால் அனைத்து நாடுகளும் விமான சேவையை ரத்து செய்துவருகின்றன. இதனிடையே இந்தியாவிலிருந்து பிலிப்பைன்ஸ் சென்று மருத்துவம் படிக்கும் மாணவர்கள் 50 பேர் நாடு திரும்ப முடியாமல் சிங்கப்பூர் விமான நிலையத்தில் தவிக்கின்றனர்.
இதுகுறித்து சிவசேனாவைச் சேர்ந்த எம்.பி. விநாயக் ராவத் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ''சிங்கப்பூர் விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 50 மாணவர்களை அங்கிருந்து வெளியேற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாணவர்களுக்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது சரியல்ல.
சிங்கப்பூரில் இருக்கும் இந்திய தூதரகம் சார்பாக மாணவர்களிடம் பேசப்படவில்லை. எனவே மாணவர்களை சிங்கப்பூரில் இருந்து வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு விமான சேவையை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவிட் 19: கோமியம் அருந்தி குமட்டல், வாந்தி - பாஜக உறுப்பினர் கைது!