குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவரும் வேளையில், இந்திய ஒன்றியத்திலுள்ள சில மாநிலங்கள் இச்சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிவருகின்றன. அந்த வகையில், கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெறும் கேரளாவில் இச்சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான் அடுத்தடுத்து சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றின.
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் இச்சட்டத்தை எதிர்த்து தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறியிருக்கிறார். தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களிலுள்ள எதிர்க்கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றக்கோரி ஆளும் அரசுகளிடம் வலியுறுத்திவருகின்றன. சமீபத்தில் தனியார் செய்தி தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இவ்விவகாரத்தில் மத்திய அரசை சரமாரியாக விமர்சித்திருந்தார்.
இந்தச் சூழலில் ஐரோப்பிய நாடாளுமன்றமும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப் போவதாகத் தெரிவித்துள்ளது. ஐக்கிய ஐரோப்பிய இடதுசாரிகள் - நோர்டிக் கிரீன் இடதுசாரிகள் அரசியல் குழு சார்பில் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பலர் நாடற்றவர்களாக ஆக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கும் அத்தீர்மானம், கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்திய குடியுரிமை பெறுவதற்கான அடிப்படை உரிமைகளை சீரழிக்கும் நோக்கில் இச்சட்டத்தை இந்தியா உருவாக்கியுள்ளது என்றும் குற்றஞ்சாட்டுகிறது. இந்தத் தீர்மானம் தொடர்பாக அடுத்த வாரம் புதன்கிழமை (பிப்.5ஆம் தேதி) ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படு, அடுத்த நாளே தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும். தீர்மானம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், அது ஐரோப்பிய ஆணையத்துக்கும் இந்திய அரசுக்கும் அனுப்பப்படும்.
”குடியுரிமை திருத்தச் சட்டம் ஜனநாயக ரீதியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொது விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டு, சட்டமாக்கப்பட்டது. அதுபோக, இச்சட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவாகாரம் என்பதால் ஐரோப்பிய நாடாளுமன்றம் இவ்விவகாரத்தில் தலையிடக் கூடாது” என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணைத் தாக்குதல்