நமது நாட்டில் கடவுள், தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சினிமா நடிகர்கள், நடிகைகள் என பல்வேறு தரப்பினருக்கும் சிலைகள் வைத்து அவர்களைப் பெருமைபடுத்துவது ரசிகர்களின் வழக்கம். ஆனால் ஆந்திர மாநிலம் ஜமிக்கி நகரில் தனது காதலிக்கு சிலை வைத்து இளைஞர் ஒருவர் கோயில் கட்டியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் எர்னிபாபு. இவர் மும்பையைச் சேர்ந்த சுஜாலா என்பரிடம் ஃபேஸ்புக் மூலம் பேசியுள்ளார். இந்த பேச்சு நீண்டு, பின்நாட்களில் காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் ஹைதராபாத்தில் சந்தித்து திருமணம் செய்ய தீர்மானித்துள்ளனர். ஆனால் எதிர்பாராவிதமாக சுஜாலா உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார். இதனால் மனமுடைந்த எர்னிபாபு, நீண்ட நாட்களுக்கு பின் காதலி பிரிந்த துயரத்தில் இருந்து வெளிவந்தார்.
இந்நிலையில், எர்னிபாபுவின் கனவில் சுஜாலா தொடர்ந்து வருவதாக உடனிருப்பவர்களிடம் கூறிவந்துள்ளார். இதனால் தனது காதலிக்கு தனது வீட்டிலேயே சிலை வைத்து கோயில் ஒன்றை கட்டலாம் என முடிவெடுத்து, தற்போது கோயிலைக் கட்டி முடித்துள்ளார். இன்று அந்த கோயில் திறந்துவைக்கப்பட்டு, சிலையோடு ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மனைவிக்காக அரண்மனையை உருவாக்கிய தமிழ் ஷாஜகான்