கரோனா வைரஸ் தொற்றுப் பரவலால், தகவல் தொழில் நுட்பத் துறைப் பணிகளில் பெரும் மந்த நிலை ஏற்படப் போகிறது என, அண்மையில் ஒரு பரப்புரை செய்யப்பட்டுவருகிறது. பரப்பப்படும் இந்தத் தகவலில் எந்த உண்மையும் இல்லை என்கின்றனர், அத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள்.
தகவல் தொழில் நுட்பத் துறை பணியாளர்கள் சமீபத்திய நுட்பங்களை உள்வாங்கிக் கொண்டு, தங்களைப் புதுப்பித்துக் கொண்டால் வேலையிழப்பு குறித்து, அவர்கள் அச்சமடைய வேண்டியது இல்லை என அவர்கள் அழுத்தமாகக் கூறுகின்றனர்.
ஆனாலும், இந்தத் துறையின் உள்ளே வந்து விட்டோம்; அவ்வளவுதான் வாழ்க்கை உறுதிப்பாடு கிடைத்து விட்டது எனக் கருதிக் கொண்டு, புதிய நுட்பங்களை உள்வாங்கிக் கொள்ளாதவர்கள், நிச்சயமாகக் கஷ்டப்படுவார்கள் என்றும், அவர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக, தங்கள் வளாக நேர்காணல்களில் குறிப்பிடத்தக்க ஊதியத்துடன் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள், புதுப்புது நுட்பங்களைப் பற்றி அறிந்து கொள்ளாதவர்கள் நிச்சயமாக சிரமத் திசையை எதிர்கொள்வார்கள். தற்போது, செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடானது மறுக்கப்படாத ஒரு நிலையில், வளர்ந்து வரும் நுட்பங்களை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ள முடியாத தன்மை இருக்குமானால், அது தகவல் தொழில் நுட்ப வேலைகளை பாதிக்கும்.
செயற்கை நுண்ணறிவு , தானியக்கம், இயந்திரக் கற்றல், 5 ஜி ஆகியவை மிக விரைவில் அதிகத் தேவை உள்ள புதிய தொழில் நுட்பங்களாக இருக்கப் போகின்றன. இருக்கின்ற பணியாளர்களால், இந்த நுட்பங்களில் பணியாற்ற முடியாவிட்டால், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் அவர்களை வெளியேற்றி விட்டு, நிறுவனத்தின் நலனுக்காக திறமையுள்ள புதியவர்களைச் சேர்க்கும் கட்டாயத்துக்கு ஆளாக்கப்படும்.
இதுவே, வேலைநீக்கமானது தவிர்க்க முடியாததாக இருக்கிறது என்பதற்கான காரணம் என உள்நாட்டு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் விளக்கம் அளிக்கின்றன. ஒவ்வொரு நிறுவனமும், பொதுவாக தன் ஊழியர்களின் முழு ஆண்டுப் பணித் திறன் குறித்து தொடர்ச்சியான நிதி ஆண்டின் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் மதிப்பீடு செய்கிறது.
அதன் அடிப்படையில், அவரவரின் திறத்துக்கான மதிப்பை அளித்து, அவர்களுக்கு ஊக்குவிப்பு வழங்கும் அல்லது வேலை நீக்கம் செய்யும். கோவிட்- 19 பெருந்தொற்று பரவியதன் காரணமாக, எல்லா நிறுவனங்களுக்கும் தற்போது நிதி இழப்பால் பெரும் சுமை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தியா போன்ற நாடுகளில், அமெரிக்கா போன்ற பிற நாடுகளிடம் இருந்து செயல் திட்டங்கள் இன்னும் கிடைக்காத காரணத்தால், நிதி ரீதியாகவும் அன்றாட இயக்க ரீதியாகவும் மிகப்பெரிய சவால்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதைச் சமாளித்து சந்தையில் நிற்பதற்காக, சில நிறுவனங்கள் மாறுபடும் ஊதியத்தைக் குறைப்பதில் மட்டும் ஈடுபடுகின்றன; வேறு சில நிறுவனங்களோ சரிவரச் செயல்படாத பணியாளர்களை பணிநீக்கம் செய்வதில் ஈடுபட்டுள்ளன.
புதிதாக ஆள்களைப் பணியில் அமர்த்துவதைக் குறைக்கவும் முயல்கின்றனர். குறிப்பாக, வளாக ஆள்சேர்ப்பு போன்ற சிலவற்றை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளன. தகவல் தொழில் நுட்பத்தில் புதிய நுட்பங்களைக் கற்றுக்கொள்ள, இந்தத் தனிமைப்படுத்தல் காலகட்டம் பொருத்தமான ஒரு தருணம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அலுவலகங்களில் வேலை நேரத்தில் புதியவற்றைப் பற்றி யோசித்துப் பார்க்க நேரமும் வாய்ப்பும் அமைவது இல்லை. வீட்டிலிருந்து வேலை செய்கையில் புதிய நிரலாக்க (Programming) மொழிகளைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பாகவும், இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
வேலைப் பாதுகாப்பு என்பது குறிப்பிட்ட நபர் தன் திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் புதுப்பித்துக் கொள்ளவும் எந்த அளவுக்கு தொடர் பயிற்சியோடு இருக்கிறார் என்பதைப் பொறுத்தது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சிந்தனைக்குச் சில விவரங்கள்:
- நகரத்தில் உள்ள தகவல் தொழில் நுட்பப் பணியாளர்களின் எண்ணிக்கை - 5,46,000.
- பெங்களூர் மற்றும் சென்னைக்கு அடுத்தபடியாக 3 ஆவது இடத்தில் ஐதராபாத்தின் தகவல் நுட்பத் தொழில் துறை உள்ளது.
- ஐதராபாத்தில் தகவல் நுட்பத் துறை வளர்ச்சிக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன .
கோவிட் 19-ன் தாக்கம்:
- மந்த நிலை, வேலை இழப்பின் அளவு - வெறும் 5 விழுக்காடு மட்டுமே!
- முழு நிலைப்புத்தன்மை உடைய துறைகள் - மருத்துவம், சுகாதாரம் மற்றும் வங்கித் துறைகள்
- நிலைப்புத்தன்மை அற்ற துறைகள் - உபசரிப்பு, உணவகம், பயணம் மற்றும் சுற்றுலா
தொழில் நுட்பமானது அன்றாடம் மாறிக் கொண்டே இருக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, நம்மை நாம் புதுப்பித்துக் கொண்டே இருப்பதன் மூலம் நம்முடைய செயல் திறனை மேம்படுத்தும் தேவை உள்ளது. வேலை தேடுவோரைப் போல அல்லாமல், பணியில் உள்ளவர்களும் இளைஞர்களும் அடுத்த தலைமுறையினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க முயல வேண்டும்.
அப்படி இருந்தாலும் பணியாளரை அவரின் நிறுவனம் உரிய காரணம் இல்லாமல் பணியிலிருந்து நீக்கினால், அது குறித்து தொழிலாளர் சட்டங்களின் கீழ் முறையிட முடியும். அத்துடன், மாநில தொழிலாளர் நல ஆணையரின் கவனத்திற்கும் கொண்டுசெல்ல முடியும்.