சுதந்திர இந்தியாவின் முதன்மையான தலைவர்கள் வறுமையின் இரட்டை குழந்தைகள் எனப்படும் பசியையும் நோயையும் போக்குவதில் குறியாக இருந்தனர். இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால் உலக சுகாதார அட்டவணையின் பட்டியலில் உள்ள 117 நாடுகளில் இந்தியா 102ஆவது இடத்தில் உள்ளது.
கோவிட் 19 தொற்று கோடிக்கணக்கான தினக்கூலிகள், புலம்பெயர் தொழிலாளர்களை பசிக் கொடுமையில் ஆழ்த்தியிருக்கிறது. நோய் தொற்றைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு, இம்மக்களை கடுமையாக பாதித்துள்ளது. கட்டடப் பணிகள், தயாரிப்பு மற்றும் விவசாயப் பணிகள் ஒரு நிலைக்கு வந்துள்ள வேளையில், கரோனாவுக்கு முன்பு பசியால் இறந்துவிடுவோமே என அம்மக்கள் அஞ்சுகின்றனர்.
பிரதான் மந்திரி கரிப் கல்யான் யோஜனா திட்டத்தின் கீழ் 81 கோடி மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதன்மூலம் 6 மாதங்களுக்கு தேவையான பொருட்களை பயனாளர்கள் ஒரே வேளையில் பெற முடியும். மிக மோசமான சூழலில், ஒவ்வொருவருக்கும் 2 கிலோ அதிகமான உணவுப் பொருட்களை அரசாங்கம் வழங்கும். இது பாராட்டத்தக்க திட்டமாக இருந்தாலும், வெளிமாநிலங்களில் வேலை செய்யும் குடும்ப அட்டைதாரர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. ஒரு தேசம் - ஒரு குடும்ப அட்டை திட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்றுவந்த வேளையில், இந்த கரோனா தாக்குதல் விளிம்பு நிலை மக்கள், வீடற்றவர்களின் வாழ்க்கையை ஆபத்தான நிலைக்கு தள்ளியிருக்கிறது.
இந்த சூழலில் மத்திய, மாநில அரசுகள் பாதிக்கபட்ட மக்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை ஆய்வு செய்யாமல் உதவ வேண்டும். மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் எடுக்கப்பட்ட சமீபத்திய கணக்கெடுப்பின்படி, 96 விழுக்காடு புலம்பெயர் தொழிலாளர்களை உணவுப் பொருட்கள் சென்று சேரவில்லை, 70 விழுக்காட்டினருக்கு மாநில அரசாங்கம் சமைத்த உணவுகளை இலவசமாக வழங்கிவருவது பற்றிய விழிப்புணர்வு இல்லை.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி காலத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு, அதன்கீழ் இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கு மக்களுக்கு உணவுப் பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டன. 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி 121 கோடி இந்தியர்களில், 80 கோடி இந்தியர்கள் இத்திட்டத்தால் பயனடைந்தனர். தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 137 கோடியாகும், அதில் 92 கோடி பேர் இத்திட்டத்தால் பயனடைகின்றனர். ஆனால் 81 கோடி பேரிடம் மட்டுமே குடும்ப அட்டைகள் உள்ளன, அதிலும் போலிகள் அதிகம். அரசின் அமைப்பில் உள்ள ஓட்டைகள் உண்மையான பயனாளர்களை பயனடையவிடாமல் தடுக்கிறது. ஆனால் இந்த சூழலில் இப்பொது விநியோக அமைப்பை பிறர் பயன்படுத்துவது சரியல்ல. ஒரு ஆண்டுக்கு தேவையான உணவுப் பொருட்கள், 5 லட்சம் நியாய விலைக்கடைகளுக்கு விநியோகிக்கப்பட கிடங்கில் தயார் நிலையில் உள்ளன.
குறுவை சாகுபடி விரைவில் சந்தைக்கு வரும். இந்த வேளையில் உபி, டெல்லி, கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தினக்கூலிகளுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இலவச உணவை வழங்கிவருகின்றன. ரேசன் கார்டு அல்லது ஆதார் கார்டு உள்ளிட்ட விவரங்களைப் பார்க்காமல் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
உணவுக் கிடங்கில் போதுமான பொருட்கள் இருந்தும், பிரிட்டிஷ் அரசாங்கம் அதனை மக்களைச் சென்று சேரவிடாமல் நிறுத்தியதன் விளைவே 1943 வங்காளப் பஞ்சத்துக்கு காரணம். கரோனா சூழலில் உணவுப் பாதுகாப்பு என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் இதன் மூலம் உணர வேண்டும்.