நாட்டில் பரவிய கரோனா தொற்றால் அமலுக்கு வந்த ஊரடங்கு பலரின் வாழ்வாதாரத்தை ஒரு நொடியில் ஸ்தம்பிக்க செய்தது. ஆயிரக்கணக்கானோருக்கு வேலையிழப்பு ஏற்பட்டது. பலரும் இன்னும் வேலை தேடி வருகின்றனர். சிலர் கிடைக்கும் வேலைகளை செய்துவிட்டு அன்றைய நாளை ஓட்டி வருகின்றனர். அந்த வகையில், மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பொறியாளர் ஒருவரின் வாழ்க்கை பாதையை கரோனா முற்றிலுமாக மாற்றியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் பகுதியை சேர்ந்தவர் சாரங் ராஜ்குரே. இவர் மெக்கானிக்கல் இன்ஜினியராக புனேவில் பணியாற்றி வந்தார். ஊரடங்கால் வேலையிழந்த சாரங், செய்வதறியாமல் திகைத்து வந்தார். அவரின் தந்தை மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (எம்.எஸ்.ஆர்.டி.சி) ஊழியராக பணியாற்றுகிறார். ஊரடங்கால் பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டதால், சாராங்கின் தந்தைக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, குடும்பத்தின் மொத்த சுமையும் சாராங் மீது வந்ததால், சொந்த ஊரிலே சிறியதாக தேநீர் கடை ஒன்றை தொடங்கியுள்ளார். வேலை பார்த்தப்படியே போட்டி தேர்வுகளுக்கும் தயாராகி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "புனேவில் 12 மணி நேரம் அயராது உழைத்த பிறகும், நான் மாதத்திற்கு ரூ .15,000 மட்டுமே பெற்றேன். ஆனால், தற்போது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்தும் மாதம் ரூ .20,000க்கு மேல் சம்பாதிக்கிறேன்" என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றார்.