நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், நாட்டின் பொருளாதாரம் மூடங்கியுள்ளது.
ஊரடங்கு காலத்திற்கு பின் விமானப் போக்குவரத்து சேவையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தனியார் விமான நிறுவனங்கள், தனியார் ஏஜென்ட்களுடன் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டது. இதற்காக, அந்த அமைச்சகத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், ராஜீவ் காந்தி பவனில் உள்ள மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் பி பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அந்த அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது, மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியருடன் பணிபுரிந்த சக ஊழியர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு மத்திய அமைச்சகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், "கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் அமைச்சகம் வழங்கியுள்ளது. அவர் விரைவில் இதிலிருந்து மீண்டு வர வேண்டுகிறேன்", என்று தெரிவித்தார்.
இதையும் பார்க்க: வேலை பார்க்க சொன்ன உதவி ஆய்வாளரைத் தாக்கிய காவலர்