மின் துறையை தனியார் மயமாக்குவது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு புதுச்சேரியில் உள்ள பல்வேறு கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதுச்சேரி மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவினர் ஒரு மணிநேரம் பணிகளை புறக்கணித்து, திப்பு ராயப்பேட்டை பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் கருப்பு கொடி ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் மின் விநியோகம் தனியாரிடம் சென்றால் சேவை மனப்பான்மை இல்லாமல் முழுக்க லாப நோக்கத்துடன் மட்டுமே இருக்கும். இதனால் பொதுமக்கள் பயன்படுத்தும் மின் கட்டணம் பல மடங்கு உயரும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தடைப்படும். தெரு விளக்குகளை பராமரிக்க தனியார் நிறுவனத்திற்கு பராமரிப்பு கட்டணமாக மாதா மாதம் பல கோடிகளை புதுவை அரசு செலுத்த நேரிடும்.
எனவே இவற்றையெல்லாம் தவிர்க்க மின்துறை அனைத்து பொறியாளர்கள் சங்கம், அனைத்து ஊழியர்கள் சங்கங்கள் ஒன்றிணைந்து முதற்கட்டமாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தண்ணீர் பிரச்னையில் இருந்து தப்பிய சென்னை..!