உலக வெப்பமயமாதலைத் தடுக்க பல்வேறு நாடுகளும் பல முயற்சிகளை கையாண்டு வருகின்றன. எரிபொருளால் இயங்கும் மோட்டார் வாகனங்களுக்குப் பதிலாக எலெக்ட்ரிக் பேட்டரியின் உதவியால் இயங்கும் வாகனங்களை உருவாக்கும் புதிய முயற்சியும் அதில் அடங்கும். இந்த வகை எலெக்ட்ரிக் வாகனங்களிலிருந்து நச்சுப்புகை வெளியாகாது என்பதால் காற்று மாசுபடுவதைத் தடுக்கலாம்.
இதனால், இந்தியாவில் 2023ஆம் ஆண்டுக்குள் எலெக்ட்ரிக் பேட்டரியுடன் கூடிய மூன்று சக்கர வாகனங்களும், 2025ஆம் ஆண்டுக்குள் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே அனைத்து வாகன தொழிற்சாலைகளும் தயாரித்து இந்தியா முழுவதும் இயக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவிலே முதல் முறையாக முழுவதும் எலெக்ட்ரிக் பேட்டரியின் உதவியால் உருவாக்கிய "கோனா" என்ற காரை ஜூலை 24ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார். 36வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தைக் குறைத்துள்ளதாக அறிவித்தார்.
குறைந்த வரி விகிதங்கள் பின்வருமாறு:
வாகன வகைகள் | பழைய ஜிஎஸ்டி விகிதம் | புதிய ஜிஎஸ்டி விகிதம் |
எலெக்ட்ரிக் வாகனங்கள் | 12% | 5% |
சார்ஜிங் ஸ்டேசன்ஸ் | 18% | 5% |
எலெக்ட்ரிக் பேருந்துகள் | 12% | 0% |
மேலும், இந்த வரி விகிதக் குறைப்பு ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருமெனவும் தெரிவித்தார். எலெக்ட்ரிக் பேருந்துகளுக்கு 12 சதவீதத்திலிருந்து வரியே இல்லாமல் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.