இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட், பவர்கிரிட், தேசிய கனிம வள மேம்பாட்டு கழகம், பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட், இந்துஸ்தான் காப்பர் உள்ளிட்ட 12 அரசு நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்க முயற்சித்துவருகிறது.
இந்த நிறுவனங்களில் 51 விழுக்காட்டிற்கு கீழ் தன் பங்குகளை குறைக்க முயற்சித்தபோதிலும், மேலாண்மை கட்டுப்பாட்டை மத்திய அரசு தக்கவைத்துக் கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், நிறுவனத்தில் மத்திய அரசு வைத்துள்ள பங்குகளின் அடிப்படையில் தனியாருக்கு விற்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
பாதுகாப்பு, நிதி ஆகிய நிறுவனங்களை தவிர்த்து, மற்ற நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்கவே மத்திய அரசு முனைப்பு காட்டிவருகிறது. பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 63.17 விழுக்காடு, தேசிய கனிம வள மேம்பாட்டு கழகத்தில் 72.28 விழுக்காடு, பவர்கிரிட்ல நிறுவனத்தில் 55.37 விழுக்காடு, இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 55 விழுக்காடு, இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் 76.05 விழக்காடு பங்குகளை மத்திய அரசு வைத்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களின் அரசின் பங்குகளை 51 விழுக்காட்டிற்கு கீழ் கொண்டு செல்ல மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. ரயில்வேத் துறை தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுகள் அடிபட்டு வரும் நிலையில், இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.