ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டின் மூத்த சகோதரர் அக்ரைசன் கெலாட் உரம் தயாரிக்கும் நிறுவனம் நடத்திவருகிறார். இவர், 2007 முதல் 2009 வரையிலான காலத்தில் மானிய விலையில் பொட்டாசியத்தை இறக்குமதி செய்து உரம் தயாரித்துள்ளார்.
மானிய விலையில் பெறும் பொட்டாசியத்தை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது என்பது விதி. இந்த விதியை மீறி இவர் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளார். இந்த மோசடி கடந்த 2012ஆம் ஆண்டு கண்டறியப்பட்டு அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், உர மோசடி தொடர்பாக கடந்த வாரம் ராஜஸ்தான், மேற்குவங்கம், குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். ராஜஸ்தானில் அக்ரசைன் கெலாட்டின் அலுவலகம், வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டது.
உர மோசடி புகார் குறித்து சுங்கத்துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில், நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் அக்ரைசன் கெலாட் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
ராஜஸ்தான் மாநில அரசியல் களத்தில் பாஜக - காங்கிரஸின் மோதல் தீவிரமாக உள்ள நிலையில், முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கவே அவரது சகோதரர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: பிகார் வெள்ளம்: 12 மாவட்டங்களைச் சேர்ந்த 30 லட்சம் பேர் பாதிப்பு!