பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் தொடர்பாக பாட்னா காவல் துறையிடம் சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே. சிங் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், எனது மகன் தற்கொலைக்கு தூண்டப்பட்டதாகவும், சுஷாந்தின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 15 கோடி மாயமான விவகாரத்தில் நடிகை ரியா சக்கரவர்த்திக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு உள்ளது என குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, ரியா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது அமலாக்க இயக்குநரகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் சுஷாந்தின் காதலி ரியா சக்கரவர்த்தி, அவரது சகோதரர் ஷோயிக், தந்தை இந்திரஜித், சுஷாந்தின் சி.ஏ. சந்தீப் ஸ்ரீதர், முன்னாள் மேலாளர் மற்றும் ரியா நிர்வாகி ஸ்ருதி மோடி, ரியாவின் சி.ஏ. ரித்தேஷ் ஷா, சுஷாந்தின் பிளாட்மேட் சித்தார்த் பிதானி, வீட்டு மேலாளர் சாமுவேல் மிராண்டா மற்றும் மறைந்த நடிகரின் பிற தனிப்பட்ட ஊழியர்கள் அனைவரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதே போல், சுஷாந்தின் சகோதரி மிது சிங்கிடமும் விசாரணை நடத்தினர்.