கடும் மூடுபனி காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், பெங்களூரு விமான நிலைய பயணிகள் மூடுபனி காரணமாக பலமுறை தங்களின் பயணங்களை தள்ளி வைத்துள்ளனர். அவர்களுக்கு நற்செய்தியாக, குறைந்த மூடுபனியிலும் விமானத்தை இயக்குவதற்கான அனுமதி பெங்களூரு விமான நிலையத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம், CAT-IIIB தரத்திற்கு உயர்த்தப் பட்டுள்ளது. இதன் மூலம், குறைந்த மூடுபனியிலும் அங்கு விமானங்களை இயக்கலாம். இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "CAT-IIIB தரத்திற்கு உயர்த்தப்பட்ட தென்னிந்தியாவில் முதல் விமான நிலையம் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையமாகும்.
நாட்டிலேயே இதுவரை 5 விமான நிலையங்களுக்கு தான் இந்த தரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, பெங்களூரு விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்குவதற்கு 50 மீட்டர் வரை விஷுவல் ரேஞ்ச் இருந்தால் போதுமானது. அதேபோல் விமானத்தை புறப்படுவதற்கு 125 மீட்டர் வரை விஷுவல் ரேஞ்ச் இருந்தால் போதுமானதாகும்.
முன்னதாக தரையிறங்குவதற்கு 550 மீட்டரும் புறப்படுவதற்கு 300 மீட்டரும் தேவைப்பட்டது. அதேபோல், மூடுபனி காரணமாக பெங்களூரு விமான நிலையத்தில் விமானங்கள் தாமதமாகவும் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றியும் விடப்பட்டு வந்தது. தற்போது தீவிர வானிலை இருந்தாலும், விமானங்களை இயக்க எந்தவித தடையும் இல்லை.