மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் துர்கா பூஜைக்கான திருவிழாக் காலம் தொடங்கியுள்ளதால், மக்களின் வசதிக்காக புதிதாக கட்டப்பட்ட கிழக்கு - மேற்கு பகுதிகளை இணைக்கும் அண்டர் கிரவுண்ட் மெட்ரோ ரயில் நிலையம் திறக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இந்த ஃபூல் பாகன் மெட்ரோ ரயில் நிலையத்தை ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், மாநில அமைச்சர் பாபுல் சுப்ரியோ ஆகியோர் காணொலி காட்சி வழியாக திறந்து வைத்தனர். சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தாவில் மீண்டும் ஒரு அண்டர் கிரவுண்ட் ஸ்டேஷன் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், " கிழக்கு - மேற்கு பகுதிகளுக்கு சாலை வழியாக செல்ல ஒரு மணி நேரம் ஆகும் பட்சத்தில், மெட்ரோ ரயில் உதவியால் 15 - 18 நிமிடங்களுக்குள் எளிதாக சென்றுவிடலாம். மேலும், சால்ட் லேக் செக்டர் 5இல் இருந்து ஹவுரா மைதானம் வரையிலான பணிகள் டிசம்பர் 2021க்குள் நிறைவடையும். அதன், பணிகள் சீராக தொடர்ந்தால், நாட்டின் முதல் அண்டர்வாட்டர் மெட்ரோ ரயில் 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஹூக்லி ஆற்றில் அடியில் இயக்கப்படும்" எனத் தெரிவித்தார்