2019ஆம் ஆண்டு கோடைகாலம் இந்தியாவுக்கு பெரும் சவால் அளிக்கும் வகையில் இருந்தது. இந்தியாவின் முன்னணி மெட்ரோ நகரங்கள் தண்ணீர் பஞ்சத்தால் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகின. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை வரலாறு காணாத அளவு தண்ணீர் பஞ்சத்தை சந்தித்து என்றே சொல்லலாம்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறை தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணைகளின் நீர் இருப்பு நிலவரம் குறித்த தரவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. இரு மாநிலங்களில் உள்ள முக்கிய அணைகளின் கொள்ளளவு, கடந்தாண்டின் நீர் நிலவரம், நடப்பாண்டின் நீர் நிலவரம் ஆகியவை இந்த தரவுகளில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், கடந்தாண்டு இதே வேளையில் தமிழ்நாடு, கர்நாடக மாநில அணைகள் தனது முழு நீர் கொள்ளவை கொண்டிருந்தன. கடந்த ஆண்டு பருவமழை நல்ல முறையில் பெய்ததன் காரணமாக அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டி நீர் கடலுக்கு செல்லும் அளவிற்கு மழைப்பெழிவு இருந்தது. ஆனால் இந்தாண்டு நிலைமை தலைகீழாக மாறி அனைத்து அணைகளிலும் நீரின் கொள்ளவு பாதியாக குறைந்துள்ளது.
![Tamil](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3997078_tn.jpg)
உதாரணமாக, மேட்டூர் அணை கடந்தாண்டு இதே வேளையில் முழுக்கொள்ளவான 120 அடியாக இருந்த நிலையில், தற்போது 47 அடியாக குறைந்துள்ளது. அதேபோல் பவானிசாகர், வைகை, பரம்பிக்குளம், ஆழியாறு, சாத்தனூர், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி என அனைத்து அணைகளிலும் கடந்தாண்டைக் காட்டிலும் நீர் அளவு வெகுவாகக் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டைப் போலவே கர்நாடக அணைகளும் இந்த பின்னடைவை சந்தித்துள்ளன. கடந்தாண்டு கிட்டத்தட்ட முழு கொள்ளளவான 122 அடியாக இருந்த கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர் மட்டமானது, தற்போது 86 அடியாக குறைந்துள்ளது. மற்ற முக்கிய அணைகளான கபினி, ஹேமாவதி ஆகிய அணைகளின் நிலைமையும் இதேதான்.
![karnataka](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3997078_kar.jpg)
நீர் மேலாண்மையில் நாம் எவ்வளவு பின் தங்கியுள்ளோம் என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன. பருவ மழையை நம்பியுள்ள நமது நாட்டின் நீர் சேமிப்பு என்பது அத்தியாவசிய ஒன்றாக கருதப்படுகிறது. அப்படியிருக்க கடந்தாண்டு மழையை ஒழுங்காக சேமித்து வைக்கத் தவறி 12 மாதங்களில் பஞ்சப்பாட்டு பாடும் அவல நிலையில்தான் நமது நீர் மேலாண்மை தற்போது உள்ளது. இந்த நிதர்சனத்தை இந்த புள்ளிவிவரம் தெளிவுபடுத்துகிறது.